'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 22, 2019 06:28 PM

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் முதற்கட்டமாக தபால் வாக்குகள் மற்ற வாக்குகள் எல்லாம் எண்ணப்பட்டு மே 23, காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் சுற்று முடிவு அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ElectionResults2019 - Vote Counting will be started by 8am, EC

இதுபற்றி தமிழக தலைமைச் செயலகத்தில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது,  45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிவிடும் என்றும், 4000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு இந்த வாக்கு எண்ணிக்கை ப்ரோசஸ் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்றும், தலைமை செயலகத்தில் இருக்கும் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் அவ்வப்போதைய தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அந்தந்த வாக்கு எண்ணிக்கைகளை பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் 88 தேர்தல் கண்காணிப்பாளர்களின் ஒப்புதலுக்கு பின்னர் தேர்தல் அதிகாரி மூலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்புப் பொறுப்பில் இருப்பார்கள் என்றும், திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரை 34 சுற்றுகளும், சென்னையில் 19 சுற்றுகளும் என அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வாக்கு எண்ணிக்கை விகிதங்கள் கொண்ட மையங்கள் உள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடியும் நேரத்தை கணக்கிட இயலாத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தப்பட்டு, அதே மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், மீதமிருக்கும் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பின்,  தபால் வாக்கு முடிவையும் சேர்த்து ஒன்றாக காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவில், முடிவாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கென  சென்னைக்கு மட்டும் 5,000 போலீசார் என, தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் போலீசார் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தவிர துணை இராணுவப் படையினர் மற்றும் தமிழக சிறப்பு காவலர்கள் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் eci.gov.in அல்லது elections.tn.gov.in இணைய தளங்கள் மற்றும் VOTER HELPLINE என்கிற மொபைல் ஆப் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Tags : #ELECTIONS #LOKSABHAELECTIONS2019 #ELECTIONCOMMISSION #TAMILNADUASSEMBLY #ELECTIONRESULTS2019 #VOTECOUNTING