'அடுத்த பிரதமர் யார்'?... தயாரான 'வாக்கு எண்ணும் மையங்கள்'... '3 அடுக்கு பாதுகாப்பு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 23, 2019 07:08 AM
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுவது இந்திய நாடாளுமன்ற தேர்தலாகும். இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.இதில் தமிழகத்தை பொறுத்தவரை வேலூர் தொகுதி நீங்கலாக,38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இதையடுத்து நாடு முழுவதும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு தொடங்க இருக்கும் வாக்கு எண்ணிக்கைகாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன்,22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
சென்னையை பொறுத்தவரை வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்களின் முகவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முன்னணி நிலவரம் மதியத்திற்கு மேல் தெரிய வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால்,இறுதி முடிவுகள் வெளியாக சற்று காலதாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.