'ஓ.பி.எஸ். மகனைப் போல் தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன மற்றொரு வேட்பாளர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 20, 2019 03:40 PM
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, திருமண அழைப்பிதழ் ஒன்றில் மாணிக்கம் தாகூர் எம்.பி. என அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. அதன் பிறகு தான் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, தேனி நடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு குச்சனூர் கோயிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த கல்வெட்டு அகற்றப்பட்டு புதிதாக வேற கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் தி.மு.க. நகரச் செயலர், ஏ.எஸ்.கே. ரமேஷ்குமார் என்பவரின் மகள் திருமணம் வரும் ஜூன் 9-ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது.
இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழில், முன்னிலை வகிப்பவர் என்ற இடத்தில் மாணிக்கம் தாகூர் பெயருடன் எம்.பி. என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். தேர்தல் முடிவு வருகின்ற 23-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில், எம்.பி. என அழைப்பிதழில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்படாத நிலையில், அதற்குள் மாணிக்கம்தாகூர் எம்.பி. என அழைப்பிதழில் அச்சடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தான் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையே முடிந்துள்ளது. அதற்குள் அடுத்த சர்ச்சையா என விருதுநகர் பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
