'வேலையில ஸ்ட்ரிக்ட்டா இருப்போம்' ... 'ஆனாலும் மனசு தங்கம்' ... இறுதி சடங்கிற்கு வழியில்லாமல் நின்ற குடும்பத்திற்கு உதவிய சப் இன்ஸ்பெக்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் வேலு (41). இவருக்கு செல்வி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். வேலுவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி செல்வி செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கின் காரணமாக செல்வி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் வேலு தினமும் பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வேலு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வா சிங் வேலு வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது வேலுவின் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்யக் கூட பணமில்லாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் சிங் உடனடியாக அருகிலுள்ள ஏ.டி.எம்மில் இருந்து 5000 ரூபாய் எடுத்து இறுதி சடங்கு செய்து கொள்ளுங்கள் எனக்கூறி வேலுவின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளார். இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் காவல் ஆய்வாளரின் செயலை குமரி மாவட்ட காவல்துறை பாராட்டி, முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து ராபர்ட் சிங் கூறுகையில், 'வேலு நேற்றே தற்கொலை செய்யப்போவதாக கூறி மின்கம்பத்தை பிடிக்க முயன்றுள்ளார். குடும்பத்தினர் தடுத்து நிறுத்திய நிலையில் அதிகாலை அனைவரும் தூங்கிய நேரம் பார்த்து வேலு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மனைவி செல்வியும் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர்களின் இக்கட்டான சூழ்நிலையை அறிந்து பணம் கொடுத்து உதவி செய்தேன். வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் எப்படியோ தகவல் வெளியில் தெரிந்து நிறைய பேர் என்னை அழைத்து என்னை பாராட்டுவது தான் சங்கடமாக உள்ளது' என்றார்.
