‘கொரோனா’ வார்டில் இருந்த ‘3 பேர்’... ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து ‘உயிரிழப்பு’... மரணத்திற்கான ‘காரணம்’ குறித்து சுகாதாரத்துறை ‘விளக்கம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மரியஜான் (66) என்பவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்துவிட்டு ஊர் திரும்பியதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருடைய மகன் சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 13ஆம் தேதி ஊர் திரும்பியதை அடுத்து மரியஜான் இருமல், காய்ச்சலால் அவதிபட்டுள்ளார்.
இதன்காரணமாக அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென இன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும் அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டார் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும், 66 வயது முதியவர் சிறுநீரக நோய் காரணமாகவும், 24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்று ரத்தத்தில் கலந்து நச்சுதன்மையாக மாறியதாலும் உயிரிழந்ததாகவும், அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
