'ரொம்ப பயமா இருக்கு'... 'எங்கள காப்பத்துங்க'... ‘தனிமைப்படுத்தப்பட்ட சொகுசுக் கப்பலில்’... ‘நடுக்கடலில் தவிக்கும் இந்தியர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 08, 2020 09:25 PM

ஜப்பானின் யோகாஹாமா (Yokohama) பகுதியில் கடந்த 2 வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ள வைர அரசி என்னும் சொகுசு கப்பலில், இந்தியர்கள் 138 பேர் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

138 Indian People who in Quarantine Diamond Princess Ship

சீனாவுக்கு சென்று வந்த டைமண்ட் பிரின்சஸ் என்னும் சொகுசு கப்பலில் ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால், அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை. யோகாஹாமா பகுதியில் கடந்த 2 வாரங்களாக கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3700 பேரும் கண்காணிக்கப்படுகின்றனர். அதிலிருப்போரில் 61 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியான நிலையில், மாலுமிகள் 132 பேரும், சுற்றுலா பயணிகள் 6 பேரும் இந்தியர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அந்த கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் கப்பலில் இருக்கும் நோயாளிகளால், தங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். சீனாவில் உள்ள உகான் நகரில் இந்தியர்களை மீட்டது போல் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்குமாறு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பினய் குமார் சர்கார், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், ‘நாங்கள் அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். விதிகளை மீறி நான் பேசியது தவறுதான். இப்படி பேசாமல் இருந்தால் நாளை நான் உயிரோடு இருப்பேனா, அல்லது இறந்துவிடுவேனா என எனக்கு தெரியவில்லை. இந்திய அரசு எங்களை இந்த கப்பலில் இருந்து மீட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், எங்களுக்கும் பயமாக இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்’ என்று வெள்ளிக்கிழமை பேஸ்புக்கில் 1 நிமிடம் 46 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கப்பலில் இருப்போர் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய ஊழியர்களும், பயணிகளும் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கின்றனர். தூதரகத்தின் தகவலின் அடிப்படையில் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக’ குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CORONAVIRUS #FEAR #CHINA #JAPAN