‘பேய்’ நகரத்தைப் போலவே இருந்தது... ‘துணிச்சலுடன்’ மீட்டு வந்த ‘ரியல்’ ஹீரோக்களின் ‘திகில்’ அனுபவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 09, 2020 01:37 AM

சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியர்களை மீட்டு வந்த மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Air India Pilots Share About Indian Students Rescue In Wuhan

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 31 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.

அதன் முதற்கட்டமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி 324 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் வுஹானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்தது. பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி மேலும் 323 இந்தியர்கள் அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியாவைச் சேர்ந்த 34 பேர் அடங்கிய குழு இந்த மீட்புப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதையடுத்து துணிச்சலுடன் சென்று இந்தியர்களை மீட்டு வந்த  மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள விமானிகள், “4 மணி நேரப் பயணத்திற்கு பின் வுஹானைச் சென்றடைந்தோம். முதலில் பெரிய அளவில் வித்தியாசமாக எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், வுஹான் நகரில் இறங்கத் தொடங்கியதுமே அங்கு பேரமைதி நிலவியது. விமான நிலையங்களிலிருந்த விமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. வீதிகள் காலியாக இருந்தன. வுஹான் நகரம் திரைப்படங்களில் வரும் பேரழிவுற்ற பேய் நகரத்தைப் போலவே இருந்தது.

சுமார் 8 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து அனைவரும் வந்த பின்னரே கிளம்பினோம். நாங்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்ட பிறகே அங்கு தங்குமிடங்களில் இருந்து வெளியேற அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்த பின்னரே அங்கிருந்து நாங்கள் கிளம்பினோம். பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7:30 மணியளவில் இந்தியாவிற்கு வந்தோம். இந்த மீட்புப்பணி மிகவும் சவாலானதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளனர்.

Tags : #AIRINDIA #CHINA #WUHAN #CORONAVIRUS #PILOTS