'இப்போல்லாம் சாப்பிட்ட உடனே பயங்கரமா தூக்கம் வருது...' 'தூக்க மாத்திரையை சாப்பாட்டுல கலந்து கொடுத்து...' போட்டிப் போட்டு திருடிய அக்கா, தங்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 14, 2020 05:28 PM

பங்களா வீட்டில் 2 ஆண்டுகளாக வேலை செய்துவந்த அக்கா, தங்கை ஆகியோர் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கம், பணம் ஆகியவற்றைத் திருடியதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

sisters together for two years money jewelry robbery

சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் சாலையில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் பிரபல டாக்டர் கோகுல்தாஸ் (84). இந்த வீட்டில் கோகுல்தாஸும் அவரின் மனைவியும் மட்டுமே தங்கியிருந்தனர். கோகுல்தாஸின் மகன் கல்யாண்குமார் (40). தொழிலதிபரான இவர், குடும்பத்தோடு எழும்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருகிறார்.

இந்தநிலையில் 6,00,000 ரூபாயை பீரோவில் வைத்துக் கல்யாண்குமார் பூட்டி வைத்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு அவர் பீரோவைத் திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டுகள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து அப்பாவிடமும் அம்மாவிடமும் கல்யாண்குமார் விசாரித்துள்ளார். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.

இதனால், பீரோவிலிருந்த குடும்ப நகைகளைக் கல்யாண்குமார் சரிபார்த்துள்ளார். அப்போது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. இதையடுத்துக் கல்யாண்குமார், எழும்பூர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கல்யாண்குமாரின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள், சில மாதங்களாக பகல் நேரத்தில் அயர்ந்து தூங்குவதாகக் கூறியுள்ளனர். முதுமை காரணமாக அவர்கள் தூங்கியிருக்கலாம் எனப் போலீஸார் முதலில் கருதினர். இந்த வழக்கில் பீரோவின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்துள்ளதால் கோகுல்தாஸ் வீட்டில் வேலைசெய்பவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.

ஒவ்வொருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ்.நகர் முதல் தெருவைச் சேர்ந்த லோகநாயகி (48), அவரின் தங்கை ஷாலினி (34) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

போலீஸாரின் விசாரணையில் லோகநாயகியும் ஷாலினியும் டாக்டர் கோகுல்தாஸ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரும் சேர்ந்து கோகுல்தாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு பகலில் தூக்க மாத்திரையை பொடியாக்கி உணவில் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர், இருவரும் தூங்கிய பிறகு கள்ளச்சாவி மூலம் பீரோவைத் திறந்து போட்டிபோட்டி நகை, பணத்தைத் திருடியுள்ளனர். இவர்கள் இருவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும் 8 தங்க பிஸ்கட்கள், லட்சக்கணக்கில் பணம், சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது பற்றி போலீசார் கூறும்போது, "இவர்கள் இருவரும் திருடும்போது சேலைக்குள் மறைத்து வைத்து நகை, பணத்தைத் திருடிவந்துள்ளனர். திருடிய பணத்தில் லோகநாயகியும் ஷாலினியும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளனர். இன்னும் சில நகைகளை மீட்க வேண்டியதுள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்று தெரிவித்தனர்.

Tags : #ROBBERY