“ஒரு பிள்ளை, ஒரு மனைவியையே குடும்பத்துல சமாளிக்க முடியாது” .. எடப்பாடி பழனிசாமி பங்குபெற்ற விழாவில் SAC கலகல பேச்சு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவன நிகழ்வின் துவக்க விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ,சந்திரசேகர், “சாதாரண மனிதர்களுக்கே பெரிய பெரிய பிரச்சனை எல்லாம் வரும். ஒரு மனைவி, ஒரு புள்ளையவே சமாளிக்க முடியாது. (சிரிக்கிறார், அனைவருமே சிரிக்கின்றனர்). அப்படியான பிரச்சனைகள் எல்லாம் வரும் ஒரு குடும்பத்தில், ஒரு மனைவி ஒரு பிள்ளை என இருக்கிற அந்த குடும்பத்தையே சமாளிக்க முடியவில்லை. அதிலேயே பெரிய பிரச்சினைகள் வரும் என்பதை தான் நான் சொல்ல வந்தேன்” என்று சொல்லி சிரிக்கிறார்.
மேலும் பேசியவர், “எடப்பாடி ஒரு முதல்வர் இருக்கையில் வரும் பிரச்சினைகளை எல்லாத்தையும் சிரித்து சிரித்துக் கொண்டே சமாளித்தவர், அது உண்மை, அந்த உண்மையை நாம் பாராட்ட வேண்டும். நமக்கு என்ன பிரச்சனை என்றால் படிக்கும் பொழுது இளம் வயதில் காமராஜர் என்கிற ஒருவரை பற்றி கேள்விப்பட்டு அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது சில நேரங்களில் அது ஏமாற்றம் கொடுக்கிறது. அந்த நேரத்தில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. உழைப்பதற்காக வருபவர்கள் எங்களுக்காக உழையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நானே பல இடங்களில் அவரை விமர்சித்திருக்கிறேன். நீங்களே பார்த்திருப்பீர்கள். நான் உண்மையில் நினைத்தேன், திடீரென இவர் முதலமைச்சராக வந்த அமருகிறாரே? என்று நினைத்தேன். இது ஒரு பெரிய பதவி, தமிழ்நாடு என்கிற மாநிலத்தை ஆள வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும், கட்டிக் காக்க வேண்டும், இப்படியான பெரிய பொறுப்பில் எப்படி இவர்? என்று நினைத்து பார்த்தேன். ஆனால் இரண்டு விஷயத்தில் நான் சந்தோஷப்பட்டேன். கடந்த 15, 20 வருடங்களில் அரசியல் வாழ்க்கைகளில் நான் பார்த்தபோது ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு சாமானியன் இந்த இடத்தில் உட்கார முடிந்தததற்கு பாராட்ட வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், ஒரு வளர்ச்சியை பார்க்க முடிந்தது. அந்த நிர்வாக திறன் கண்டு வியந்தேன். ஒரு சிறந்த நிர்வாகி என்பதை அடுத்து ஒரு வருடத்தில் நிரூபித்தார், நல்லது நடந்தால் நல்லதை பாராட்ட வேண்டும், அதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று குறிப்பிட்டார். குறிப்பாக, “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நானும் பாரதிராஜாவும் இன்னும் சிலரும் சென்று அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம், அப்போது அவருடைய அணுகக்கூடிய வழிமுறை மிகவும் சாதாரணமான முறையில் இருந்தது. சாதாரண மனிதரோடு சந்தித்து பேசுவதாகவே எங்களுக்கும் இருந்தது. அதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.