“வேலை செய்ற இடத்துல இனி இவங்களுக்கு இந்த வசதிலாம் இருக்கணும்!".. மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமை செயலாளர் இறையன்பு ஆணையிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இளைப்பாறவும், உணவு அருந்தவும் போதிய இடம் அமைத்துத் தர வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை அமைக்கப்பட வேண்டும் எனவும் இதுகுறித்த ஆவணங்கள் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில்,"அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்பதும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர். நீங்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதியவேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதிதாகக் கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்க திட்ட வரைபடத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம். செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள். மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளரான மேரி என்பவர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியரிடம் ஒப்படைத்ததை அறிந்த இறையன்பு, அவரை பாராட்டும் விதமாக கடிதம் எழுதியிருந்தார். அதில் "நீங்கள் தூய்மை பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று” என பாராட்டியிருந்தார். இது பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்விடம் அமைக்கும்படி மாவட்ட ஆட்சியாளர்ளுக்கு அவர் கடிதம் எழுதியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மற்ற செய்திகள்
