24,679 வைரங்கள்.. 3 மாச உழைப்பு.. சென்னை மாலில் கின்னஸ் சாதனை படைச்ச வைர மோதிரம்.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனை படைத்த வைர மோதிரம் தொடர்பான செய்தி, தற்போது அங்கே வரும் மக்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள SWA டைமண்ட்ஸ், உலக அளவில் அசாத்திய சாதனை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் படைத்திருந்தது. ஒரு மோதிரம் என்றால், அதில் சில வைரங்களை கொண்டு வடிவமைக்கபட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், SWA டைமண்ட்ஸ் உருவாக்கி இருந்த மோதிரத்தில் சுமார் 24,679 வைரங்களை வைத்து அதனை உருவாக்கி இருந்தனர். ஒரு மோதிரத்தில் அதிக வைர கற்கள் பதிக்கப்பட்டதற்கான கின்னஸ் சாதனையையும் இந்த மோதிரம் படைத்திருந்தது.
மலர் போன்ற வடிவில் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மக்களின் கவனத்தை திருப்புவதற்கான முயற்சிக்காக இந்த சாதனை மோதிரம் வடிவமைக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல, இந்த சாதனை வைர மோதிரத்தை வடிவமைக்க 3 மாதங்கள் வரை எடுத்துக் கொண்ட அவர்கள், மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் கைகளைக் கொண்டே, வைரங்களை தனித்தனியாக வைத்துள்ளனர். கின்னஸ் அதிகாரிகள் கூட மைக்ரோஸ்கோப் மூலம் வைரத்தின் எண்ணிக்கை, எடை, கேரட் உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்திருந்தனர். கின்னஸ் சாதனையை தொடர்ந்து ஆசியா சாதனை புத்தகத்திலும் இந்த வைர மோதிரம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அந்த சமயத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், கின்னஸ் சாதனை படைத்த இந்த மோதிரம் தற்போது சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரே மோதிரத்தில், சுமார் 24,000 வைரங்கள் பதியப்பட்டுள்ளதால் மாலில் வரும் மக்கள் பலரும் இந்த வைர மோதிரத்தினை மிகவும் வியப்புடன் தான் பார்த்து செல்கின்றனர்.
அது மட்டுமில்லாமல், இந்த மோதிரத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வைரம் பதிந்த பேனா மற்றும் வைர மோதிரம் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.