'கொரோனா தடுப்பு பணிகளுக்காக... ரூ.1,125 கோடி வழங்கும் பிரபல இந்திய ஐ.டி நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸை தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோ ரூ.1,125 கோடி நிதியுதவி வழங்குகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24ந்தேதி நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, பல்வேறு தொழிலதிபர்களும், நிறுவனங்களும், தனிமனிதர்களும் தங்களால் இயன்ற தொகையை அரசுக்கு வழங்கி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோ குழுமம் மற்றும் அசிம் ப்ரேம்ஜி அமைப்பு இணைந்து ரூ.1,125 கோடி தொகையை அரசின் நிவாரண நிதிக்காக வழங்க உள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தொகையானது, கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவம் மற்றும் பிற சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவியாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசிம் ப்ரேம்ஜி, விப்ரோ குழுமத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.