'சொந்தம்னு சொல்லிக்க இப்போ கூட யாருமில்ல' ... பார்வையற்ற பெண்ணிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ... பட்டையை கிளப்பிய புதுக்கோட்டையினர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 29, 2020 06:32 PM

புதுக்கோட்டையில் உறவினர்கள் யாரும் இல்லாத பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஊர் மக்கள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pudhukottai people do baby shower to a blind women

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் செல்வராஜ் என்பவர் அந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏழு ஆண்டுகள் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கு ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை கணவர் அடித்துள்ளார். இதனால் வீட்டிலிருந்து கோபத்துடன் கிளம்பிய நிறைமாத கர்ப்பிணி பெண் புதுக்கோட்டை வந்து அடைந்துள்ளார்.

அங்குள்ள இளைஞர்கள் சிலபேரின் உதவியால் அந்த பார்வையற்ற பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர். சிகிச்சை முடிந்த பின் காப்பகம் ஒன்றில் போலீசாரின் உதவியுடன் அந்த இளைஞர்கள் சேர்த்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் பெற்றோர்கள், கணவர் என அருகில் யாரும் இல்லாத போதும் அந்த பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள் அவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைந்து அந்த பெண்ணிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஊர்மக்கள் சிலர் கூறுகையில், 'யாருமில்லாத அந்த பெண்ணிற்கு நாங்கள் உறவினர்களாக மாறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தோம். விரைவில் அவரது கணவரை சந்தித்து இருவரையும் மறுபடியும் இணைத்து வைக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்' என தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து பார்வையற்ற பெண் கூறுகையில், 'பெற்றோர்கள் யாரும் இல்லாத குறையை இந்த ஊர்மக்கள் தீர்த்து வைத்து எனக்கு வளைகாப்பு நடத்தி வைத்துள்ளனர். என் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும். அது மட்டுமே என் தற்போதைய ஆசை' என்கிறார் மனநிறைவாக.

Tags : #TAMILNADU #PUDHUKOTTAI