'வதந்தி' பரப்பினால் 'கடும்' நடவடிக்கை... 'வெளிநாட்டு' பயணங்களை 'மறைக்கக் கூடாது..'. அமைச்சர் 'ஆர்.பி. உதயகுமார்' எச்சரிக்கை...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 27, 2020 11:40 PM

கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுயதனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் சமுதாய இடைவெளி ஆகிய இரண்டு மட்டுமே தற்போதை சூழலில் நமக்கு கைகொடுக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

protection against corona Minister R.B. Udayakumar\'s instructions

இதுகுறித்து நமது பிகைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், உலகெங்கும் 198 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஒரு கட்டுப்படுத்தக் கூடிய நோய் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நோய்த் தொற்றை ஒரு தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஐந்து கூட்டங்களைக் கூட்டி ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக தற்போதைய சூழலில், சுய தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் சமூக இடைவேளி போன்ற பழக்கங்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பது சற்று கடினமானதுதான் என்றாலும், எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு, மனித குலத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். கண்ணுக்கு தெரிந்த எதிரியாக இருந்தால் அதை சமாளிப்பது என்பது வேறு, ஆனால் கண்ணுக்கே தெரியாத, காற்றில் கலந்திருக்கிற, நாம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மறைந்திருக்கிற வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது சாவாலான விஷயம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது அரசின் உத்தரவுகளை கடைப்பிடிப்பது என்பது மனித குலத்தை காக்கும் சேவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், சுய தனிமைப்படுத்தலையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது மிகமிக அவசியம் என மீண்டும் வலியுறுத்தினார்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், மருந்து பொருட்களும் கிடைக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், அதனை கண்காணிக்க 24 மணி நேர மாநில அவசரக் கட்டப்பாட்டு மையம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 144 தடை உத்தரவு என்பது சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக போடப்பட்டது அல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும், சமுதாய இடைவெளியை காவல்தறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கடைப்பிடிக்குமாறும் குறிப்பட்டார்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு தெரிவித்து தேவையான பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்ளுமாறும், அவர்களைக் கண்காணிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் இந்த சூழலில் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags : #CORONA #TAMILNADU #MINISTER #R.B. UDAYAKUMAR #BEHINDWOODS #EXCLUSIVE INTERVIEW