'போலீசார்' கையில் 'லத்தி' எடுக்க 'தடை...!' 'பொதுமக்களை அடிக்கவோ, மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது...' 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' ...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 27, 2020 09:27 PM

அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வோர் மீது போலீசார் தடியடி நடத்த வேண்டாம் என போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

The police should not attack or intimidate civilians

கொரோனா வைரஸ் பீதி காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வோர் மீது போலீசார் தடியடி நடத்திய காட்சிகள் செய்திச் சேனல்களில் வெளியானது.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரையில், "ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "பொது மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் விபரீதம் குறித்து பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்வோர், கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் உள்ளிட்டோரிடம் சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்துங்கள். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது" என அவர் கூறியுள்ளார்.

Tags : #CORONA #TAMILNADU #POLICE #CHENNAI #ASSISTANG COMMISSIONER