'மதுரையில்' கொரோனாவுக்கு இறந்தவரின் 'இறுதிச் சடங்கு'... வெறும் '4 பேருக்கு' மட்டுமே 'அனுமதி'... தெரு முழுவதும் 'தடுப்புகள்' ... 'உருக வைக்கும் சோகம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 26, 2020 04:46 PM

மதுரையில் கொரோனாவுக்கு பலியானவரின் இறுதிச் சடங்கில் வெறும் 4 பேர் மட்டும் கலந்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

only 4 members allowed to attend the burial of tamil nadu

மதுரையில் அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் புதன் கிழமை அதிகாலை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தோற்றால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

இவரது இறுதிச் சடங்கு மேலமடையில் இன்று அதிகாலை நடைபெற்றது. இறுதிச் சடங்கிற்கு உடலை எடுத்து செல்லும்போது, இவரது மனைவி, மகன், அவரது இரண்டு சகோதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இறந்தவரின் உடல் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து நேரடியாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட தெரு முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கயிறால் கட்டப்பட்டது. அந்த தெருவில் இருக்கும் 60 வீட்டினர் வெளியே வராமல் கண்காணிக்கப்பட்டனர். இந்த தெருவை ஒட்டிய மற்ற தெருக்களிலும் தடுப்பு அமைக்கப்பட்டது. யாரும் அந்த இடத்தில் செல்ல முடியாத அளவிற்கு கண்காணிக்கப்பட்டது'

சுடுகாட்டில் குழி தோண்டும் வரை ஒரு மணி நேரம் அவரது உடல் பிரேத வாகனத்தில் இருந்தது.குடும்ப உறுப்பினர்கள் தவிர மடிச்சியம் காவல் நிலைய காவலர்கள் பிரேதத்துடன் இறுதிச் சடங்கிற்கு வந்து இருந்தனர். இறுதிச் சடங்கு சரியாக இன்று காலை 5 மணிக்கு முடிந்தது.

உறவு முறிவுகள் இருந்தாலும், சாவுக்கு சென்று வந்துவிட வேண்டும் என்று கருதும் பாரம்பரியத்தில் வந்த தமிழர்களாகிய நமக்கு, இப்படி ஒரு நிலை தொடராமல் இருக்க நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுதலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த இறுதிச்சடங்கு உணர்த்துகிறது.

Tags : #CORONA #BURIAL #MADURAI #RAJAJI HOSPITAL #TAMILNADU