'மேள, தாள' ஆரவாரம் இல்லாமல் ... 'உறவினர்கள்' கலந்து கொள்ளாமல் ... 'சட்டுபுட்டு'ன்னு சாலையிலேயே நடந்து முடிந்த திருமணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 26, 2020 03:47 PM

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் முன்பு சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Marriage in Ramanathapuram district held in road side of a temple

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவலாகி வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும், கண்மணி என்ற பெண்ணுக்கும் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள முருகன் கோவில் முன்பு சாலையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரது வீட்டிலும் சேர்த்து மொத்தம் பத்துக்கும் குறைவானவர்களே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சாலையில் நின்றவாறே மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டினார். மேள தாளம், அட்சதை தூவுதல், குலவைச் சத்தம் என எந்த ஆரவாரமுமின்றி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து மணமகன் முருகானந்தம் கூறுகையில், 'கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண மண்டபம் பிடித்து பத்திரிக்கையும் அடித்தோம். கொரோனா பாதிப்பால் சமூக நலன் கருதி முருகன் சன்னதி முன்பு சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டோம்' என தெரிவித்தார்.

இதுகுறித்து மணமகள் கண்மணி கூறுகையில், 'கோவிலுக்குள் திருமணத்தை நடத்த நினைத்தோம். அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் நின்றவாறே திருமணம் செய்து கொண்டோம். இது சற்று வருத்தமாக இருந்தாலும், சமூக அக்கறையுடன் எங்கள் திருமணம் எளிதாக நடத்தப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்றார்.

சாலையில் நின்று தாலி கட்டிக்கொண்ட மணமக்களை அவ்வழியே சென்ற சிலர் வாழ்த்தினர். திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மணமக்கள் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAMANATHAPURAM #TAMILNADU #144 LOCKDOWN