‘மனிதாபிமானத்துடன் சேவை புரியும் மருத்துவ பணியாளர்கள்!’... ‘அவங்க இங்கயே தங்கிக்கலாம்!’.. ‘டாடா குழுமத்தின் நெகிழ வைக்கும் முயற்சி!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூட கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் பணி முடிந்து வீடு திரும்பும் மருத்துவர்களும் செவிலியர்களும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இதனால் மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் டாடா குழுமத்துக்கு சொந்தமான தாஜ் குரூப் ஓட்டல்களில் தங்கி கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே உறுதி செய்ததோடு தமது ட்விட்டர் பக்கத்தில் கொலபாவில் உள்ள தாஜ் மற்றும் பாந்திராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டல்களில் மருத்துவப் பணியாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் இதற்காக ரத்தன் டாட்டாஜிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக கொரோனாவுக்கு எதிராக போராடும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட 500 கோடி ரூபாய் நிதியை ரத்தன் டாடா வழங்கியதாகவும், அதைத்தொடர்ந்து டாடா சன்ஸ் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் நிவாரண பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும் அந்த அறக்கட்டளையின் தலைவர் எம். சந்திரசேகரன் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் மனிதாபிமானத்துடன் தன்னலமற்ற சேவை புரியும் மருத்துவ பணியாளர்கள் நல்ல உடல் நலத்துடனும், பாதுகாப்புடனும், மனநலத்துடனும் வாழ வாழ்த்துவதாக தாஜ் ஹோட்டல்களின் பொதுமேலாளர் இந்திராணி குப்தா தெரிவித்துள்ளார்.
