'உன் குழந்தைய கொன்னுருவேன்...' 'பணத்திற்காக நண்பனின் குழந்தையை கடத்தி...' பேக்ரவுண்ட்ல வந்த சவுண்ட் வச்சு சேஸ் பண்ணிய போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 19, 2020 12:03 PM

நண்பரின் குழந்தையை கடத்தி வைத்து கொண்டு 5 லட்சம் பணம் கேட்ட நபரை சென்னை போலீசார் துரத்தி பிடித்து குழந்தையை மீட்டனர்.

Plaintiff kidnaps friend\'s child for Rs 5 lakhs

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராதேஷ் ஷியாம் (28) மனைவி ராக்கி(25) மற்றும் குழந்தைகள் ராத்திகா(4), அத்தீஷ் பிரஜாபதி(2),  அமீத் (6 மாதம் ) ஆகியோருடன்  ஆவடியில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராதேஷ் ஷியாம் வீட்டிற்கு உத்திரபிரதேசத்தில் அவருடன் பணிபுரிந்த ஷானிகுமார்(26) என்ற ராதிஷின் நண்பர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். தமிழகத்தில் யாரையும் அறியாத ஷானி குமார் ராதேஷ் ஷியாம் வீட்டிலேயே தங்கி அவரது உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ராதேஷின் இரண்டாவது மகன் அத்தீஷ் பிரஜாபதிக்கு சாக்லெட் தருவதாக கூறி ஷானிகுமார் குழந்தையை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். குழந்தையுடன் சென்ற ஷானிகுமார் மாலை 4 மணிவரை இருவரும் வீடு திரும்பாததால், ராதேஷ் ஷியாம் ஆவடி போலீஸில் மாலை 7 மணியளவில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே ஷானிகுமார் ராதேஷுக்கு போன் செய்து "குழந்தையை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.5 லட்சம் பணம் தந்தால் குழந்தையை திரும்ப தருவேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்" என்றும் மிரட்டியுள்ளார்.

தனிப்படைபோலீஸார் ஷானிகுமாரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இடம் தொடர்ந்து மாறி மாறி காட்டியது. குழப்பமடைந்த போலீசார் தொடர்ந்து ராதேஷை ஷானிகுமாரிடம் பேச சொல்லியுள்ளனர். இதனை பதிவு செய்த  தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தபோது பின்னணியில் ரயில் ஒலி எழுப்பும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்தனர். மேலும் செல்போன் சிக்னலும் மாறி மாறி வந்ததால் ஷானிகுமார் ரயிலில் பயணம் செய்வதை உறுதி செய்தனர் போலீசார்.

அதை அடுத்து செல்போன் சிக்னலை பயன்படுத்தி ஷானிகுமார் பயணித்த ரயிலை கண்டறிந்தனர். ஷானிகுமார் ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில்  இருப்பதை அறிந்த போலீஸார், நெல்லூருக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் ஷானி குமார் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர். குழந்தை அத்தீஷ் பிரஜாபதியுடன் உறங்கிக் கொண்டிருந்த ஷானிகுமாரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags : #KIDNAP