'நல்லா பார்த்துப்பாங்கனு’... ‘நம்பி அனுப்பி வச்சேன்'... 'பெற்றோர் செய்த காரியத்தால்'... ‘கலங்கி துடிக்கும் இளம் தம்பதி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 19, 2019 12:00 PM

அவமானம் கருதி, மகளின் ஆண்குழந்தையை சொந்த தாத்தா-பாட்டியே விற்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

parents sell their daughter\'s child for rs 3 lakhs in salem

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - மீனா தம்பதி. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்துகொண்டு, அங்கேயே தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் மீனாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த உடன், மீனாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததுடன், மனநிலை சற்று பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தாயையும், குழந்தையையும் தனியாக பார்த்துக்கொள்ள முடியாமல் தவித்து வந்த ராஜா, மீனாவின் பெற்றோரிடம், குழந்தையையும், தாயையும் நம்பி ஒப்படைத்துவிட்டு, நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். எப்போது ஃபோன் செய்தாலும், தாயும், சேயும் நன்றாக உள்ளதாக ராஜாவிடம் கூறியநிலையில், மீனாவின் உடல்நிலை சரியானது.

அதன்பின்னர், பெற்றோரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோதுதான், குழந்தை பிறந்த 2 வாரத்திலே, வேறொருவரிடம் குழந்தையை வளர்க்க கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன இளம் தம்பதி, அங்கு சென்று விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய்க்கு குழந்தையை, விற்றது தெரியவந்தது. மேலும், மீனாவும், ராஜாவும் உறவினர்கள் என்றாலும், அண்ணன், தங்கை முறை வருவதால், அவர்களது திருமணம் பிடிக்காமல் இருந்துள்ளனர் மீனாவின்  பெற்றோர்.

இதனால் அவமானம் கருதி அவர்களுக்கு பிறந்த குழந்தையை, வேறொருவரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. பெற்றோரின் செயலால் தங்களது குழந்தை இல்லாமல் கலங்கிய இளம் தம்பதி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். குழந்தை தற்போது யாரிடம் உள்ளது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : #COUPLE