'இளம் தம்பதி பார்த்த வேலை'... ‘கிளினிக்கில் நடந்த சோதனையில்’... ‘வெளியான அதிர்ச்சி சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 05, 2019 09:31 PM
திருத்தணி அருகே வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, கிளினிக் வைத்து, இளம் தம்பதி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலம் என்பதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால், தற்போது மக்கள் அதிவப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், போலி மருத்துவர்கள் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அதில் திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் தனியார் கிளினிக் ஒன்றில், சோதனை செய்தனர். அப்போது, அங்கு இருந்த முரளி (42) என்பவர் 10- வகுப்பு வரையிலும், அவரது மனைவி சிராந்தி (35) ஆசிரியர் பட்டயப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, மருத்துவம் படித்தற்கான எந்த ஒரு சான்றும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்கள் கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலி மருத்துவரான முரளி மற்றும அவரது மனைவி சிராந்தி இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் 6 போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேபோல் வேலூர் குடியாத்தத்தில் 8-வகுப்பு மட்டுமே படித்த இருவர், போலி மருத்துவர்களாக செயல்பட்டு வந்ததை அடுத்து அவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.