‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 17, 2019 06:53 PM

நாமக்கல் அருகே, அதிவேகத்தில் சென்ற அரசுப்பேருந்து, வளைவில் திரும்பியபோது, பேருந்துக்குள் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளன.

old woman fell down from government bus in namakkal accident

குமாரபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, இளங்கோ என்பவரது மனைவி கோகிலா (55). இவர், பெருந்துறையில் உள்ள மருத்துவர் ஒருவரிடம், மருந்து வாங்குவதற்காக, கடந்த புதன்கிழமை காலை, குமாரபாளையம் பேருந்து நிறுத்தத்தில், சேலத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். இடம் கிடைக்காததால், படிக்கட்டுக்கு அருகில் நின்று, அவர் பயணம் செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கோட்டை மேடு பைபாஸில், மேம்பால பணிகள் நடைபெறுவதால், சர்வீஸ் சாலையில், அதிவேகத்தில் அரசுப் பேருந்து திரும்பியது. அப்போது, பேருந்தின் உள்ளே  இருந்து, சுமார் 30 அடி தூரத்துக்கு வெளியே கோகிலா தூக்கி வீசப்பட்டு, சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கால்வாயில் விழுந்தார். இதனைக் கண்ட பயணிகள், கத்தி கூச்சலிட்டப் பின்னரே சிறிது தூரத்திற்கு சென்ற பின், அரசுப் பேருந்து நின்றது. பின்னர். அதிலிருந்து ஓடி வந்த பயணிகள், கோகிலாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டக்டருக்கு பணம் கொடுக்க, எந்தவித பிடிமானமும் இல்லாமல் கோகிலா நின்றதும், அதேசமயத்தில் பேருந்து வேகமாக திரும்பியதுமே, தூக்கிவீசப்பட காரணமாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் இந்த வளைவில் பலியாகியுள்ளதாக தெரிகிறது. தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

Tags : #ACCIDENT #SALEM #NAMAKKAL