‘பின்னால் வந்து கழுத்தை இறுக்கி’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’... ‘துணிச்சலுடன் போராடிய முதியவர்கள்‘... வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 12, 2019 04:02 PM
ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து வந்த திருடர்களை, துணிச்சலுடன் போராடி முதிய தம்பதி ஓட ஓட விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகவேல் என்ற விவசாயி. இவர், வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது, முதியவருக்கு தெரியாமல், அவருக்கு பின்னால் திடீரென இரண்டு மர்மநபர்கள் முகமூடி அணிந்ததவாறு, ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களில் ஒருவன், முதியவரின் கழுத்தில் துண்டைப் போட்டு பக்கத்திலுள்ள கம்பியில் கட்டிவைக்க முயன்றார்.
அப்போது சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த முதியவர் சண்முகவேலின் மனைவி செந்தாமரை, தனது கையில் கிடைத்த பொருளைக் கொண்டு திருடர்களை தாக்குகிறார். முதியவரும் அவர்களிடம் இருந்து போராடி தப்பித்து, திருடர்களை தாக்குகிறார். முதியவர்கள் இருவரும் தங்களது கைக்கு கிடைத்த பொருள்களை வைத்து திருடர்களை தாக்குகின்றனர். தம்பதிகள் இருவரும் திருடர்களை ஓடஓட விரட்டி அடிக்கின்றனர்.
இருப்பினும் சண்முகவேலின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் மதிப்பிலான தங்க செயினை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடியில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகளை வைத்து, தற்போது போலீசார் முகமூடி அணிந்து, திருட வந்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். அரிவாளுடன் திருடர்கள் வந்திருந்தாலும், அவர்களை துணிச்சலோடு அடித்து துரத்திய தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
