‘துக்க நிகழ்ச்சிக்கு போனபோது’... ‘தாய், மகனுக்கு’... ‘நடுவழியில் நிகழ்ந்த பயங்கரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் செல்வராஜ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேரி சுகிலா (43) திட்டுவிளையில் உள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் அஜித் (17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படித்து வந்தார். இஇந்நிலையில் நேற்று காலை அஜித், தனது தாய் மேரி சுகிலாவுடன் ஸ்கூட்டியில் தடிக்காரன்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
பூதப்பாண்டி எட்டாமடை அருகே செல்லும்போது முன்னே சென்ற டெம்போ ஒன்றை அஜித் முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, சாலையில இருந்த பள்ளம் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேரல் மீது மோதாமல் இருக்க ஸ்கூட்டியை திருப்பியுள்ளார். ஆனால் பின்னால் வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியின் மீது மோதியது. இதில் அஜித் மற்றும் மேரி சுகிலா இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டெம்போ ஓட்டுநர் தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அறிந்த மேரி சுகிலாவின் உறவினர்களும் பொதுமக்களும் சேர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் சாலையை சீரமைக்க கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கு தீர்வு ஏற்படும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி அவ்வழியே வந்த அரசு பஸ்களையும் சிறைப்பிடித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
