'உங்க பொண்ணு தூக்குப் போட்டு செத்துட்டா...' 'இன்னொரு பொண்ணோட லிங்க் இருக்கு, அதனாலதான் என் பொண்ண...' அதிர வைக்கும் பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில், யோகா ஆசிரியை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், ஓரகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). யோகா ஆசிரியரான இவருக்கும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதசாலை பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவரின் மூன்றாவது மகள் ஜீவிதாவுக்கும் (27) இரண்டரை ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
ஜீவிதாவும் யோகா ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் வேலை கிடைத்தது. வேலூர் சாய்நாதபுரம் நடேசன் முதலியார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து தன்னுடைய தாய்க்குப் போன் மூலம் ஜீவிதா கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் மாமியாரின் போனுக்கு தொடர்புகொண்டு பேசிய கருப்பசாமி, ‘ உங்க பொண்ணு தூக்குப் போட்டு செத்துட்டா’ என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வாசுகி உறவினர்களை அழைத்துக்கொண்டு திருத்துறைப்பூண்டியிலிருந்து வேலூருக்கு வந்துசேர்ந்தார். மகளின் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுதார். அதையடுத்து, பாகாயம் காவல் நிலையத்துக்குச் சென்று மருமகன் கருப்பசாமி மீது புகார் அளித்தார். புகாரில், ‘‘கருப்பசாமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு உள்ளது. இதையறிந்த என் மகளைத் துன்புறுத்தி வந்துள்ளார். அடிக்கடி மகளை மிரட்டியும் அடித்தும் பணம் கேட்டுள்ளார்.
மகளின் சாவில் மர்மம் உள்ளது. மருமகன் மீது சந்தேகம் இருக்கிறது. அவரிடம் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்’’ என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கருப்பசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
