‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘சிக்கிய கொள்ளையன்’.. ‘வெளிவந்துள்ள புதிய தகவல்கள்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 03, 2019 11:19 PM
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடித்த வழக்கில் போலீஸாரிடம் சிக்கிய கொள்ளையன் ஒருவரிடமிருந்து பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூரில் வாகன சோதனையின்போது போலீஸாரிடம் சிக்கிய நபர் ஒருவரிடமிருந்து 5 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த நகைகளில் இருந்த பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம் அவை லலிதா ஜுவல்லரி நகை என்பது உறுதியாகியுள்ளது.
கொள்ளை நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளில் இருவர் இருந்த நிலையில் வாகன சோதனையின்போது ஒருவர் சிக்கியுள்ளார். மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் வாகன சோதனையின்போது தப்பி ஓடியவர்கள் யார் எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள நபர் மணிகண்டன் என்பதும், உடன் இருந்த நபர் சீராத்தோப்பு சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய சுரேஷின் உறவினரான முருகன் அகில இந்திய அளவில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளவர் எனக் கூறப்படுகிறது. மேலும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள 5 கிலோ தங்கம் கொள்ளையடித்ததில் தனது பங்கு என மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் தப்பியோடிய சுரேஷின் தாய் உட்பட சீராத்தோப்பைச் சேர்ந்த 5 பேரின் விசாரணை நடத்தி வருகின்றனர்.