‘அவர் நோட்டா அடிச்சுட்டு இருக்காரு..நோட்டாவுக்கு ஓட்டு போட்டால், நாட்ட யார் காப்பாத்துறது?’.. கமலின் பிரத்யேக பேட்டி பகுதி 2

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 04, 2019 03:37 PM

இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கும் காரசார பதில்களின் இரண்டாம் பகுதியினை இங்கு படிக்கலாம்.

kamalhaasan compete in loksabhaelections exclusive interview part2

இரண்டு மகேந்திரனும் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிரார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் எழுகிறதே?

கட்டுப்பாடு அவசியம். அதில்லாம் எப்படி ஒரு கட்சியை ஒழுங்குக்குள் கொண்டுவர முடியும். உப தலைவர் எவ்வளவோ கட்டுப்படுத்த முடியுமா அவ்வளவு செய்யலாம். டிராபிக் கூட கண்ட்ரோல்தான். பாசிசம் அல்ல அது, அது ஒழுங்குமுறை. ஆனால் நகராதே என்பதற்கும், எப்படி நகருணும் என்பதற்குமான வித்தியாசம்தான் அது. பொறாமையினால் இப்படியான குற்றச்சாட்டுக்களை எழுப்புகிறார்கள். நடிகர்கள், பேச்சாளர்கள் மீதும் இதே பொறாமையினால் கிண்டல் அடிப்பவர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை மக்களிடம் சென்று சேர்க்க, திரைப்படங்களை பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த வகையிலாவது கமல்ஹாசனை திரையில் மீண்டும் பார்க்கலாமா?

என் மனம் மக்கள் பக்கம் உள்ளது. ஆனால் ஒரு படம் ஒப்புக்கொண்டுள்ளேன். எனினும் மக்கள் எனக்கு பொறுப்பைக் கொடுத்தால், ரசிகர்களுக்கு மன்னிப்பை உதிர்த்துவிட்டு மக்கள் பணியை கடமையாக செய்வேன். இரண்டையும் செய்ய முடியாது என நினைக்கிறேன்.

மக்கள் சந்திப்பு, வேட்பாளர்கள் இரண்டில் எதனால் நெகிழ்கிறீர்கள்.?

மக்கள்தான். இந்த அவலம் மாறுவதற்கான அவலங்கள் மாறுவதை நினைத்தால் நெஞ்சம் விம்முகிறது. வெளிநாடுகளைப் போல் நம்மூரை செழிப்பாக மாற்ற முடியும் என்பதுதான். பலர் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறார்கள். ஒரு பக்கம் துரைமுருகன் நோட்டா அடிச்சுக்கிட்டு இருக்காரு. இன்னொரு பக்கம் மக்களும் நோட்டாவுக்கு சென்றால் நாட்டை யார் காப்பாற்றுவது என்பதுதான் என் கேள்வி. பெஸ்ட் ஆஃப் தி 2 ஈவில்ஸ் என்கிற காலம் போய் இப்போது புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

செண்ட்ரிஸம் என்றால் என்ன? இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் இடையிலானதா? திராவிடத்துக்கும் தமிழுக்கு இடையிலானதா?

அண்ணாயிஸம் என்றால் என்ன? அது அண்ணாவோட இஸம். அவ்வளோதானே? காந்தியிஸம் என்றால் என்ன? அடிச்சா திருப்பி அடிக்கக் கூடாது என்பதல்ல அது. வேண்டுமானால் அங்கு தொடங்குகிறது காந்தியிஸம் என்று சொல்லலாம். மய்யம் என்பது நடுநிலைமை. இதை புதிதாக நாங்கள் திணிக்கவில்லை. வள்ளுவர் சொன்னதுதான். நீதியை இப்படித்தான் பார்க்க முடியும். மனித இனத்திற்கே உள்ளது இது. ஒரு கட்சிக்கும் இது வேண்டும். எங்க சித்தாந்தமே மக்கள் நலம்தான் எனும்போது எந்த பக்கம் போனாலும் நடுநிலை பிறழாமல் இருப்பது நல்லது.

இதை யார் தீர்மானிக்கிறார்கள்? கமல்ஹாசனா?

மக்களும் சூழலும்தான். புயலின் மையம் என்பது நீங்கள் வெச்ச இடத்துல இருக்காது. புயல் எங்க இருக்கோ, அதன் மையம்தான். பிரச்சனையின் மையம்தான் நாங்கள் அணுகுவது. எல்லாத்துக்கும் மையம் இல்லை. அதே சமயம் துணிந்து செல்ல வேண்டியுமுள்ளது.

1960-களில் திராவிட இயக்கங்கள் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டுபண்ணின. நீங்கள் செய்யப்போவதும் அதே அமைப்பை மறுவடிவத்துக்கு உட்படுத்துவதானே?

திமுக, அந்த காலகட்டத்தின் தேவையாக இருந்தது. அதை தடுத்திருக்கவே முடியாது. அது வந்து நிகழ்ந்தே ஆக வேண்டிய தேவை தமிழகத்தில் இருந்தது. ஆனால் அப்போது அவர்களின் வருகை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதே போல் அவர்களை நீக்குவதற்கான முக்கியமான தருணமாக மாறியுள்ளது. அவர்களை மக்கள் விரட்டியடிக்கிறார்கள். எங்களை வரவேற்கிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.

திமுக வருவதற்கு முன் செய்த வீரியமான போராட்டங்கள் போன்ற எதையுமே மநீம செய்யவில்லையே?

அந்த நேரம் எங்களுக்கு அமையவில்லை. நேராக களத்துக்கு வந்துவிட்டோம். எங்களின் கன்னியாகுமரி வேப்டாளரின் பங்கு ஜல்லிக்கட்டில் இன்றியமையாததாக இருந்தது. எங்கள் கூட்டத்தில் நான் உட்பட போராளிகள் நிறையவே இருக்கிறோம்.

புதிய கட்சிகள், பழைய, பெரிய கட்சிகளுக்கு மத்தியில் இந்த போட்டியை எவ்விதமாக எதிர்கொள்ள போகிறீர்கள்?

இது நடக்கும்தான். அதுதான் ஜனநாயகம். திரைத்துறையிலும் புதிய நடிகர்களின் மத்தியில் நாங்கள் எங்களை தக்கவைத்துக்கொள்வது போலத்தான். இதையும் நம்பி, தெரிந்துதான் வந்திருக்கிறோம். எதிர்கொள்வோம்.

இதுவரை புதிதாக தொடங்கப்பட்ட எல்லா கட்சிகளுமே நாங்கள்தான் மாற்றத்திற்கான கட்சிகள் என்று சொல்கிறார்கள். மக்களும் அவர்களை நம்பி ஏமார்ந்திருக்கிறார்கள். நீங்கள் உண்மையான மாற்றத்துக்கான கட்சி என்பதை மக்களிடம் எப்படி நிரூபிக்க போகுறீர்கள்? 

காலம்தான் அதற்கு வழிவகுக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு கொடுக்கப்போகும் வாய்ப்பும், நாங்கள் அரசு பரிபாலனம் செய்யப்போகும் முறையும் நாங்கள் யாரென்பதை காட்டும், சரித்திரத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்.

உங்கள் கட்சி சின்னம் பற்றி?

பெருவியாபார நிறுவனங்கள் தங்களின் லோகோவை மக்களிடம் கொண்டு சேர்க்க கோடி கோடியாக செலவு செய்வதுண்டு. பலரும் சின்னங்களை வைத்து மாறிமாறி விளையாண்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களுக்கு மக்கள் ஆதரவினாலும், நாங்கள் திட்டமிட்டு, சரியான இடத்தில் கேட்டபடி எங்களுக்கு டார்ச் லைட் என்கிற மாற்றத்துக்கான சின்னம் கிடைத்தது. நாங்கள் தூக்கிச் செல்லும் இந்த ஒளி மாற்றத்தை உருவாக்கும் என நம்புகிறோம். இதற்கு ஓட்டு போட்டால், அடுத்த 50 வருடங்களை நீங்கள் கண்டிப்பாக எங்கள் கைகளில் கொடுத்துவிடுவீர்கள்.

கட்சியை பொருத்தவரை கமல் நாத்திகரா?

ஒரு  விருந்துக்கு ஏற்பாடு செய்யும்போது விருந்தினரின் விருப்பம்தான் பார்க்கப்படும். நான் சைவமா அசைவமா என்பது பொருத்து அல்ல. நான் என்னவாக இருக்கிறேன் என்பதை மாற்றிக்கொள்ள அவசியம் இல்லாததுபோல், என்னுடைய நம்பிக்கைகளை அவர்களின் மீது திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதை என் பலவீனமாக சொல்கிறார்களோ, அதையே நான் பலமாக கருதுகிறேன். ஏனென்றால் எனக்கு சாதி கிடையாது. சாதி, மத பிரிவினைகளை வைத்து விளையாட முடியாது. அதற்கான ஆயுதத்தின் கூர் நுனியாக மநீம இருக்கும்.