'தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து'...'விவசாயத்திற்கு தனி பட்ஜெட்'...வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 02, 2019 01:50 PM

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் சார்பில், அதன் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

Congress has released its election manifesto for the 2019 Lok Sabha

டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி ''தேர்தல் அறிக்கையில் ஒரு  வாக்குறுதி கூட பொய்யாக இருக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். தேர்தல் அறிக்கை வெளிப்படை தன்மை கொண்டதாகவும், மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என பேசினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் :

1. நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000.  இந்த தொகையானது குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

2. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிச்சயம்.

3. 2030  ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை நிச்சயம் ஒழிப்பு.

4. விவசாயிகள்  அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.  சிவில் வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.

5.  தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமின்றி, எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ, அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.

6.இலங்கையுடனான மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்.

7. ரஃபேல் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.

8. அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.

9. தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.டி. திட்டம் ரத்து செய்யப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.

10.  ஜி.எஸ்.டி. முறைக்குள் பெட்ரோல், டீசல், மதுபானம் விலை கொண்டு வரப்படும். ஆதார் சட்டம் மாற்றியமைக்கப்படும்.

11. 100 நாட்கள் வேலைவாய்ப்பு 150 நாட்களாக மாற்றியமைக்கப்படும்.

12.  அரசுத் துறையில் காலியாக உள்ள 22 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

13.  புதுச்சேரி மாநிலத்திற்கு தனிமாநில  அந்தஸ்து  அளிக்கப்படும்.

14. பயங்கரவாதத்தை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்.