மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிரத்யேக பேட்டி - பகுதி 1

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 03, 2019 02:08 PM

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனிடம் வரவிருக்க்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கேள்விகளுடன் பிஹைண்ட்வுட்ஸ் செய்த நேர்காணலின் முதற்பாதியை இங்கு விரிவாக படிக்கலாம். 

MNM Party Leader Kamalhaasan exclusive Hot interview part1

1. சினிமாவில் அர்ப்பணிப்போடு முழு ஆற்றலை செலுத்தி குதூகலித்த நீங்கள் அரசியலில் இந்த ஒரு வருடமாக எடுத்திருக்கும் புதிய பிரவேசத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்? 

சினிமாவில் வொர்க்கிங் டே மற்றும் ஹாலிடே என்றெல்லாம் தனித்தனி இல்லை. நான் வொர்க் பண்ணி 30 வருசம் ஆச்சு என்பேன். எல்லா நாட்களுமே ஹாலிடேதான். ஹாலிடேவுக்காக கஷ்டமான வேலையை சந்தோஷமாக செய்வார்களே, அப்படித்தான், மக்கள் பணியை, தாமதமாக அதே சமயத்தில் கோபத்தின் மிகுதியால், வேறு வழியின்றி இதையெல்லாம் செய்ய என் கண் பட ஆளில்லை என்பதால் நான் கையில் எடுத்திருக்கிறேன். 

2. வேட்பாளார்கள் பட்டியலை மிக தாமதமாக வெளியிட்டீர்களே? ஒரு புதிய கட்சியின் ஸ்பீடு விமர்சிக்கப்படுகிறதே? 

எங்கள் ஆர்மியை எந்த அளவுக்கு திறமாக உருவாக்குகிறோம் என்பதுதான். ஸ்பார்ட்டகஸ் தன் படையை கொஞ்சம் லேட்டா ஆரமிச்சுட்டாருன்னு சொல்றதுல அர்த்தம் இல்லை. அவருக்கு சிறந்த படை தேவைப்பட்டது போல, எனக்கும் சிறந்த படை தேவைப்பட்டது அவ்வளவுதான். 10 நாளைக்கு முன்பாக வேட்பாளர்களைத் தேர்வு செய்து சரியான நேரத்திற்கு பட்டியலை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதைவிடவும் சரியான ஆட்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். 

3. எந்தெந்த அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தீர்கள்? 

முதல் விஷயம். மக்கள் மேல் நிஜமாகவே அக்கறை இருக்கிறதா என சோதிப்பதுதான். இதற்கு முன் அனுபவமும் இருக்கிறதா? அல்லது கோபப்பட்டு களத்தில் இறங்கி தோற்கவாவது செய்திருக்கிறீர்களா? உங்களால் கட்சிக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள்கேட்டபோது எங்களுக்கு வியத்தகு பதில்கள் கிடைத்தன. அதன் பிறகு உங்களால் எவ்வளவு கொடுக்க முடியும் என கேட்டோம். அதற்கு எதிர் கேள்விகள் கேட்கிறார்கள். பல கட்சிகள் சாண்டாகிளாஸ் போல மூட்டை மூட்டையாக கொடுக்கல் வாங்கல் செய்யும்போது நேர்மையாக கட்சி நடத்தும் நம்மைப் பார்த்து கேட்கும்போது கட்சி தொடங்கியபோது இருந்த கோபத்தை விட இன்னும் அதிகமாக கோபம் வருகிறது. தவிர குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு வந்தீர்களா என கேட்டோம். 

4. ஏன்? குடும்பத்தாரின் ஆதரவு அரசியல் நிலைப்பாட்டுக்கு அவசியமா? 

என்னுடைய விரிந்து பரந்த குடும்பம்தான் தமிழகமே. குடும்பத்தை விரோதிச்சுக்கிட்டு வந்து சந்தோஷமா அரசியல் பண்ண முடியாது. மனைவியாரும் துணைவியாரும் உடன் இருந்து தைரியமா இருங்க என ஒரு குரல் கொடுத்தால் அது என்னுடைய குரலை விடவும் பலமான ஆறுதல் குரல். 

5. வேட்பாளர்களை நேர்காணல் செய்து தேர்வு செய்யும் தேர்வாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்? 

எல்லாருடைய பிரதிநிதித்துவ நோக்கிலும். எல்லா விதமான சிந்தனை வார்ப்புகளும் அவர்களுக்கு இருக்க வேண்டும். கோவை சரளாவை பொருத்தவரை சாமானிய வாக்காளரின் பிரதிநிதியாக இருக்கிறார்.  மதனை பொருத்தவரை கலை, ஊடகம் சார்ந்த விஷயங்களுடன் இருக்கிறார். 

6. ஆனால் நேரடியாக களத்திற்குச் சென்று தேடாமல், சினிமா என்கிற பாதுகாப்பான தளத்தில் இருந்து வந்தவர்களே கட்சியின் முக்கியஸ்தர்களாக இருப்பது போல் தெரிகிறதே? 

இல்லை. மநீமவில் இருப்பதை விட திமுகவில் நடிகர்கள் ஜாஸ்தி இருக்கின்றனர். ஸ்டாலினின் மகனும் இளம் நடிகருமான அவர் அக்கட்சியின் சார்பாக பிரச்சாரத்திற்காக செல்கிறார். எங்கள் கட்சியினைப் பொருத்தவரை கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, கோவை சரளாவைத் தவிர நடிகர்கள் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் இந்த கேள்வி மற்றவர்களை சுட்டிக்காட்ட உதவியது. அதற்கு நன்றி. 

7. கமல்ஹாசன் பாஜகவின் ‘பி டீம்’ என்று திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களே.. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

எங்களின் அதே ஒத்த யோசனையுடைய கம்யூனிஸ்ட் எங்களுடன் இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால் காலத்தின் கொடுமை அவர்களை அங்கு சென்று சேர்த்துவிட்டது. பரவாயில்லை. ஆனால் வாய்க்கூசாமல் பி டீம் என்று சொல்லும் அந்த கட்சிகள், டெல்லியின் தீர்ப்பு வேறு விதமாக வந்தால், மொத்தமாக கட்சியை அடகு வைப்பார்கள். கண்டிப்பாக எந்த கட்சி ஜெயிக்கிறதோ அங்கு சென்றுவிடுவார்கள். இது புதிதல்ல. இதற்கு முன்பாக இவங்களே பாஜகவின் டீமாக இருந்தவர்கள்தான். அதனால் இவர்களுக்கு அதைச் சொல்ல வக்கு கிடையாது; அருகதை கிடையாது. 

8. எல்லாவற்றிலும் மற்ற கட்சிகளை விட தனித்துவமாக நிர்வகிக்கும் மநீம, களத்தில் இறங்கி வாக்குச் சாவடியின் அதிகாரக் கைப்பற்றுதலை எப்படி சமாளிக்கப் போகிறது?

பிக்-பாக்கெட் அடிப்பதற்கு தயாராக இருக்கணும் என்று நீங்கள் சொல்லக் கூடாது. பர்ஸை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளத்தான் அறிவுறுத்தலாம். பிக்-பாக்கெட் நடக்கும். ஆனாலும் நல்லவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் பூத் கேப்சர் என்று சொல்லப்படும், வாக்குச் சாவடி களத்தை கண்காணிப்பவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டுமே தவிர, ரவுடிகளாக இருக்கக் கூடாது. கரைவேட்டிக்காரர்களை ஓடவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு நின்றதுபோல் மாணவர்கள் கூட்டம் எங்களுக்கு கூடும். போலி ஒட்டுக்கள் நிகழாமல் கண்காணிப்பார்கள்.

9. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளாக எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?

ஆதார வசதி கிடையாது. நாம் பிஸ்லரி, அம்மா குடிநீர் வாங்கி குடித்துக்கொள்கிறோம். அதையும் வாங்க முடியாமல், தண்ணீருக்காக மைல் கணக்கில் நடந்து செல்லும் மக்களையும் நான் பார்த்திருக்கிறேன். இது அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநியாயம். துரோகம். அதை சரி செய்திருக்கலாம். ஆனால் இவங்களுக்கு ஸ்விஸ் மூலம் எல்லாருக்கும் பணம் அனுப்பவும், வெளிநாட்டில் முதலீடு செய்யவும் நேரம் சரியாக இருக்கிறது. குளம் வெட்டணும், மரம் நடணும் என்று பழைய காலத்து மகாராஜாவுக்கு இருந்த சென்ஸிபிலிட்டி கூட இல்லாத மடமந்திரிகள் இவர்கள். இதை வேறு விதமான மடம் மாதிரி நடத்துகிறார்கள்.  

10. கம்யூனிஸ்ட் உட்பட ஏன் நிறைய கட்சிகள் உங்கள் கட்சியை ஒரு வலிமையான  கட்சியாக பார்க்கவில்லை என நினைக்கிறீர்கள்? 

இடைஞ்சல். அவர்கள் பெரிய, பரந்த, அனுபவிமிக்க கட்சிகளுடன் சேர நினைத்திருக்கலாம். நான் நடிகனாக வந்தபோது எனக்கு நேர்ந்ததுதான். ஆனால் கே.பாலச்சந்தர் என் திறமையை நம்பி என்னை அவர் படங்களில் தொடர்ந்து நடிக்கவைத்தார். அந்த பாலச்சந்தர் இடத்தில் இன்று மக்கள் இருக்கிறார்கள். தாமதமாக என்னுடம் இணைந்த தயாரிப்பாளர்கள் போல, இந்த கட்சிகளும் வந்து சேரலாம். 

11. தேர்தல் நெருங்கும் வேளையில் மநீம-வில் இருந்து சிலர் விலகுகிறார்களே. ஏன்?

அவர்கள் வந்தபோது சொல்வதை விட இன்னும் கூடுதலான நன்றிகள் அவர்கள் சென்றதற்கு. தவறு செய்துவிட்டதால், நாங்கள் கண்டுபிடிக்கும் முன்னரே, அவர்கள் தானாக செல்கிறார்கள். 

12. ஆனால் கட்சிக்குள் அதிகார அடுக்கும், உள்கட்சி ஜனநாயகமும் பிரச்சனையாக இருப்பதாக விலகியவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே? 

அது தவறு. அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விட காலம் பதில் சொல்லும். வெளியே போனவங்க என்ன வேணா சொல்வாங்க. அப்படி ஒன்றும் முக்கியமான ஆட்களை இழக்கவில்லை. மறைந்த முதல்வர் மாதிரி , விலகியவர்களை நான் கெட்ட வார்த்தையிலும் திட்ட மாட்டேன். இதே சூழலில், உதிர்ந்த ரோமங்கள் என மறைந்த முன்னாள் முதல்வர் கூறியிருக்கிறார்.