'தலைகுப்புற கவிழ்ந்த கார்'... 'பதறாதீங்க, கையால் கார் கண்ணாடியை உடைத்த இளைஞர்'... 'மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய ஊர்மக்கள்'... நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனிதாபிமானம் இன்னும் 'சாகவில்லை, அது நமது மக்கள் ரூபத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதைப் பலரும் பல நேரங்களில் நிரூபித்து வருகிறார்கள். அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.
மதுரை கூடல் நகரைச் சேர்ந்தவர் வருண் தாஸ். இவரது மனைவி கர்ப்பமான நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மகப்பேற்றுக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மனைவி மற்றும் 7 மாத குழந்தையை அழைத்துக் கொண்டு, வருண் தாஸ் காரில் திருச்சி , மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன் பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வைத்திருந்த இபாஸ் திடீரென காரில் இருந்து வெளியே பறந்து சென்றது. உடனே அதைப் பிடிப்பதற்காக வருண் தாஸ் முயற்சித்த நிலையில், கார் நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதைப் பார்த்த அந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது உள்ளே இருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்படவே ஒருவர் தனது கையால் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கண்ணாடி குத்தி கையில் ரத்தம் வந்த நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல், கண்ணாடியை உடைத்து உள்ளே அழுது கொண்டிருந்த 7 மாத குழந்தையை மீட்டர். குழந்தையை வெளியே எடுத்தவுடன் அதன் நெற்றியில் முத்தம் கொடுத்து அந்த இக்கட்டான நேரத்திலும் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் உள்ளே சிக்கியிருந்த வருண் தாஸ் மற்றும் அவரது மனைவி ஜான்சியை மீட்ட ஊர்மக்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து துவரங்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். உலகில் மனித நேயம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது, அது எங்களைப் போன்றவர்கள் ரூபத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் மணப்பாறை பகுதி பொதுமக்கள்.