'அப்பா உன் பையன் நான் இருக்கேன்னு சொன்னியே டா'... 'கதறி துடித்த கார் ஓட்டுநர்'... சென்னையில் நடந்த சோகத்தின் உச்சம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வறுமையில் வாடிய குடும்பத்திற்காகவும், தனது தந்தையாகவும் டீ விற்கக் கிளம்பிய 15 வயது சிறுவன் சடலமாக வீடு திரும்பிய சோகம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை மண்ணடி மூர்தெருவில் வசித்து வருபவர் சாகிர் ஹசன். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பம் தவித்துள்ளது. இதனால் வருமானத்திற்கு என்ன செய்யலாம் என யோசித்த போது வீட்டில் டீ தயார் செய்து அருகில் கட்டிட வேலை நடக்கும் இடங்களுக்குச் சென்று கொடுக்கலாம் என சாகிர் யோசித்துள்ளார். அப்போது அவரது 15 வயது மகன் ரியாஸ் நானும் துணைக்கு வருகிறேன் எனக் கூறியுள்ளார். படிக்கின்ற பையனை எதற்கு வேலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சாகிர் யோசித்துள்ளார். அப்போது மகன் ரியாஸ் வீட்டில் உள்ள கஷ்டம் எனக்கும் தெரியும் அப்பா, நானும் கூட வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுவன் ரியாஸ், வீட்டில் டீ தயாரித்து கேன்களில் வைத்து கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று ரியாஸ், மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் டீ விற்கச் சென்றுள்ளார். கட்டிடத்தின் 7 மாடியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், அங்குச் சென்று டீ கொடுக்க சிறுவனிடம் கூறியுள்ளார்கள். இதையடுத்து சிறுவன் ரியாஸ், 7வது மாடியில் டீ கொடுத்துவிட்டு இறங்கி வந்துள்ளார். அப்போது 6வது மாடியில் லிப்ட் அமைப்பதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்த வேகத்தில் ரியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த சம்பவம் குறித்து அறிந்த சாகிர், மகனின் உடலைப் பார்த்துக் கதறித் துடித்தார். இதற்காகவா உன்னை டீ விற்கக் கூட்டிக்கொண்டு போனேன் எனக் கதறியது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. இதனிடையே சம்பவம் குறித்து சாகிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். லிப்ட் அமைக்கப் போடப்பட்டிருந்த இடைவெளியில் எந்த தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. கட்டிடக் கட்டியவர்களின் கவனக்குறைவு தான் தனது மகன் இறக்கக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப கஷ்டத்தை உணர்ந்து தந்தைக்கு உதவச் சென்ற 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
