தந்தையின் இறுதிச்சடங்குக்கு 'மாலை' வாங்கச்சென்ற மகன்... விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்... அடுத்தடுத்த 'மரணங்களால்' ஆடிப்போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தையின் இறுதிச்சடங்குக்கு மாலை வாங்கச்சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது மகன் ஜோதி முருகன்(32) மாலை உட்பட இறுதிச்சடங்கு பொருட்களை வாங்குவதற்காக நண்பர் முத்துச்செல்வம் என்பவரை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
குண்டலபட்டி பிரிவை தாண்டி செல்லும்போது எதிர்பாராத விதமாக மினி லாரி ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜோதிமுருகனும், அவரது நண்பரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜோதிமுருகன் பரிதாபமாக இறந்தார். முத்துசெல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
