வெளிநாட்டிலிருந்து வந்த 'கணவனிடம்' ... நகையைக் கொடுக்க மறுத்த 'மனைவி' ... இறுதியில் 'கணவன்' செய்த 'கொடூர' செயல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 20, 2020 03:54 PM

ராமநாதபுரம் அருகே நகைகளைக் கொடுக்க மறுத்த மனைவியை கொலை செய்து விட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband from Ramanathapuram district murdered his wife

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டிலிருந்த முனீஸ்வரன் அங்கிருக்கையில் மனைவியின் செலவுக்கு பணம் எதுவும் அனுப்பாமல் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்த முனீஸ்வரன் மற்றும் தனலட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த பதினெட்டாம் தேதி இரவு, மனைவியின் நகையைக் கேட்டு முனீஸ்வரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனலட்சுமி நகைகளை தர மறுக்கவே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

தனலட்சுமி உயிரிழந்த நிலையில் தேவிபட்டினம் காவல் நிலையம் சென்ற முனீஸ்வரன் போலீஸாரிடம் நடந்ததை கூறி சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். நகையை கொடுக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RAMANATHAPURAM #TAMILNADU