'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலுள்ளவர்கள் கொரோனா வைரஸ் அச்சறுத்தலுக்காக முகமூடி அணிய வேண்டிய தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் பெயரில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி திருப்புகழ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'சீனா, பிரான்ஸ், இந்தோனேஷியா, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நாளுக்கு 100 ரத்த மாதிரிகளை தமிழகத்தில் சோதனை செய்யலாம்' என்றார்.
இது குறித்து விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், 'கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் பெயரில் தமிழக மக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் தற்போது குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்பவுள்ளார். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் யாரும் இல்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 15 நாட்கள் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா வைரஸ் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க முடியும்' என நம்பிக்கையுயுடன் தெரிவித்துள்ளார்.
