டெல்லியில் இருந்து தென்னிந்தியா நோக்கி கொரோனா படையெடுத்தது எப்படி?... கொரோனாவின் தீவிரம் ஏன் ஈரோட்டில் அதிகமாக உள்ளது?... சிறப்பு தொகுப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லியில் நடைபெற்ற ஜமாத் சந்திப்புக்கும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் உள்ள தொடர்பை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அந்த 17 நபர்களில், 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். அதே சமயம், தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 5 பேர் நேற்று மரணமடைந்துள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் நடந்த இந்த இரு நிகழ்வுகளையும் இணைக்கும் மையப்புள்ளி ஒன்று உள்ளது.
கடந்த மார்ச் 16ம் தேதி அன்று, இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஹைதராபாத் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்த நாள், அவர்களுள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மற்ற 7 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
சரியாக 4 நாட்கள் கழித்து, தாய்லாந்தைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
இவர்களுக்குள்ள ஒற்றுமை என்னவெனில், இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மதம் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவர். அந்த கூட்டம் மார்ச் 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்துள்ளது. தமிழகம், தெலங்கானா மட்டுமின்றி, இக்கூட்டத்தில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த 1,500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான இந்தியர்களும், வெளிநாட்டினரும் பங்கேற்றதாக தெரிகிறது. அந்த கூட்டத்திற்குப் பின்பு அங்கிருந்த இந்தியர்கள், சில வெளிநாட்டினரை தத்தமது மாநிலங்களுக்கு அழைத்து வந்துள்ளனர். அவற்றில் சில இடங்கள் தான் தமிழகத்தின் ஈரோடு மற்றும் தெலங்கானாவின் கரீம்நகர் ஆகும்.
இந்தோனேசியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 50 மத போதகர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மசூதிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தமிழகம் வந்துள்ளனர்.
இதில், ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து மார்ச் 11 அன்று ஊருக்கு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் இருந்து சுமார் 33 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். மார்ச் 30ம் தேதியின் நிலவரப்படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 67 பேரில் 19 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஈரோட்டில் முதல் கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்ட சில நாட்களிலேயே, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 19 பேரும், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்து, 3 மசூதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இவர்களுடன் தொடர்பில் இருந்த கோவையைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மதுரையைச் சேர்ந்தவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு, தாய்லாந்து நாட்டினரை சந்தித்ததாக தெரிகிறது. தற்போது, அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற இந்தோனேசியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, சேலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, தமிழக அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 981 பேரை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. ஈரோடு, மதுரை மற்றும் சேலம் மாவட்ட அதிகாரிகள் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் 9 தெருக்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மசூதிகளைச் சுற்றியுள்ள 130 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல், தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரில் 9 இந்தோனேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தங்கியிருந்த இடம், சென்ற பகுதிகள், சந்தித்த மனிதர்கள் என அனைத்து தளங்களிலும் அம்மாநில அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.
மேலும், கடந்த மார்ச் 27ம் தேதி அன்று மரணித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், டெல்லி கூட்டத்தில் பங்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது.
Picture courtesy: The News Minute
