"இது கொரோனா ஆஃபர்!".. வைரலாகும் 'வீட்டு உபயோகப் பொருள்கள் கடை' உரிமையாளரின் அதிரடி 'ஐடியா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொரோனா ஆஃபர் என்கிற பெயரில் டிவி வாங்கினால் கிரைண்டர் இலவசம் என்று வியாபாரி ஒருவர் அறிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நடப்பு கால சூழலுக்கு தகுந்தாற்போல் வியாபாரிகள் தங்களது வணிகத்தை முன்னேற்றிக் கொண்டு செல்ல முயற்சிப்பது வழக்கம். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தை புதிய உத்தியாக பயன்படுத்திக்கொண்ட கோவில்பட்டி பார்க் சாலையில் விஜி ராஜா ஏஜென்சி என்கிற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர், ஒரு மாதமாக, கொரோனா காரணமாக தமது கடை அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தமது வியாபாரத்தைப் பெருக்கும் வகையிலும் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதன்படி 8990 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் எல்.இ.டி. டி.வி வாங்கினால், 3990 ரூபாய் மதிப்புள்ள டேபிள் டாப் வெட் கிரைண்டர் இலவசம் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அந்த கடை உரிமையாளர், மக்களிடையே தமது இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பலரும் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், தங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் நான்கு நாட்கள் அல்லது ஊரடங்கு முடிந்த பின்னர் டிவி மற்றும் வெட்கிரைண்டர் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் இதனால் மக்களுக்கு பொருள்கள் கிடைத்தது போன்றும் இருக்கும் தனக்கு வியாபாரம் நடந்து மாதிரியும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.