ஆத்தி! இம்புட்டு ரூபாயா?...'ஆம்னி' பேருந்துகள் கட்டணம் 'உயர்வு'... எப்போது அமலுக்கு வரும்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்த முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆம்னி பேருந்து பயண கட்டண தொகையை ஊரடங்கு முடிந்த பின்னர் இரு மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 1.60 என கட்டணம் இருந்த நிலையில், ரூபாய் 3.20 ஆக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும்,'' என தெரிவித்தார்.
பேருந்துகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் நஷ்டம் ஏற்படும். இதைத்தடுக்கவே ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
