'இந்த ஊர்ல எக்ஸ்ட்ரா வேல செஞ்சா... டபுள் சம்பளம்!'.. என்ன வேலை?.. எப்போது?
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுவை தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தும்.
12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை. 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளோம்.
பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும். எந்தெந்த துறைக்கு கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி வருகிறது.
புதுவையில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம், கட்டட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளோம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் சிறப்பாக பணியாற்றி வருவதால், பெரிய அளவில் பாதிப்பு இன்றி உள்ளோம். மாலை நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் கடை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.
கொரோனா பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
