'நுரையீரலை' காயப்படுத்தி 'சேதப்படுத்துவது...' நமது 'நோய் எதிர்ப்பு' அணுக்கள் தான்... 'தந்திரமாக' செயல்படும் 'கொரோனா...' 'புதிய ஆய்வில் முழுமையான விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 14, 2020 02:12 PM

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

How coronavirus kills humans-Explanation of Scientists

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் இரவு-பகல் பாராமல் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் எப்படி இப்படி லட்சக்கணக்கானோரை கொன்று குவிக்கிறது என்பது பற்றியும்கூட ஆராய்ச்சி நடந்து இருக்கிறது.

இந்த ஆராய்ச்சியை சீனாவின் ஜூன்யி மருத்துவ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை, ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

எப்படி இந்த வைரஸ் படிப்படியாக காற்றுப்பாதைகளை பாதிக்கிறது, உள் உயிரணுக்களை எவ்வாறு பெருக்குகிறது என்பது பற்றியெல்லாம் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

முதலில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான செயல்பாடுகள் மூலம்தான் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்கிறது. சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்றின் போதும் இதுவே நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று கடுமையான நிலையில் 'சைட்டோகைன் புயல் சின்ட்ரம்' என்ற நிலைக்கு அது கொண்டு செல்கிறது.

அதிரடியாக அதிகரிக்கும் சைட்டோகைன்கள், லிம்போசைட்டுகள் மற்றும் நியூட்ரோபில்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அதிகளவில் ஈர்க்கின்றன. இப்படி ஈர்க்கிறபோது, இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள், நுரையீரல் திசுக்களில் ஊடுருவி, அதனால் நுரையீரலில் காயத்தை ஏற்படுத்துகின்றன.

இறுதியில் சைட்டோகைன்கள் அதிகளவில் காய்சல், ரத்த நாளங்களின் அதிகப்படியான கசிவு, உடலுக்குள் ரத்த உறைவு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போகிறது. சுவாசக்காற்று பற்றாக்குறை உண்டாகிறது. ரத்தத்தில் அதிகப்படியான அமிலத்தன்மை ஏற்படுகிறது. நுரையீரலில் திரவங்களையும் உருவாக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் ஆரோக்கியமற்ற திசுக்களை தாக்கவும், அழிக்கவும் தவறாக வழி நடத்தப்படுகின்றன. இது நுரையீரல், இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம், பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் செயலிழப்புக்கு வழிநடத்துகிறது.

இப்படி பல்லுறுப்புகள் செயலிழப்பு நுரையீரலை மோசமாக்கி மூட வைக்கிறது. இந்த மோசமான நிலைதான், அக்கியூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்டிரஸ் சின்ட்ரம் (சுவாசக்குழாய் நோய்) என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு புரதங்கள் மற்றும் இறந்த அணுக்களின் குப்பைகளால் ஹைலீன் சவ்வு போன்ற படலம் உருவாகிறது. முடிவில் இது நுரையீரலில் படிந்து, நுரையீரலானது ஆக்சிஜனை உறிஞ்சுவதை கடினமாக்கி விடுகிறது.

ஆக, கொரோனா வைரஸ் தாக்குவதின் காரணமாக நேரிடுகிற பெரும்பாலான இறப்புகள் சுவாச உறுப்புகள் கடுமையாக சேதப்படுத்தப்படுவதன் மூலம் செயலிழப்பதன் மூலமும் தான் ஏற்படுகின்றன.