'ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம்'... 'பெருத்த' அடியிலும்... ஊழியர்களின் 'அச்சத்தை' போக்கியுள்ள... பிரபல 'இந்திய' நிறுவனம்!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 14, 2020 05:41 PM

கொரோனா பாதிப்பால் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதும் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

No Lay Off Salary Cuts Ready To Help Dealers Maruti Suzuki

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்துத் துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறையில் இழப்புகள் இன்னும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 50,000 பேர் பணியாற்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் மார்ச் 22ஆம் தேதி மூடப்பட்டன.

தற்போது ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதை அடுத்து 50 நாட்கள் கழித்து மே 12ஆம் தேதி உற்பத்தி ஆலையை மீண்டும் திறந்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. எனினும் கடத்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்துப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு, அதன் நிகர லாபம் 25 சதவீதமும், மொத்த வருவாய் 15 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும் இழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையிலும் அதன் சுமையைத் தங்களுடைய ஊழியர்கள் மீது செலுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம், இந்த மாதிரியான நெருக்கடியான நேரத்திலும் ஊழியர்களுக்கான சம்பளத்தை முறையாகக் கொடுத்து வருவதாகவும், இதுவரை ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள சப்ளையர்ஸ் மற்றும் டீலர்களுக்கும் உதவத் தயாராக உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். இனியும் ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் எனவும், சம்பளத்தைக் குறைக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன்  இயல்பு நிலை திரும்ப சில காலம் எடுக்கும் எனவும், அரசு தரப்பிலிருந்து வரிக் குறைப்பு உள்ளிட்ட ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.