இந்தியாவில் 'ஒரே மாதத்தில்' கிட்டத்தட்ட '4 மடங்கு' உயர்வு... வெளியாகியுள்ள 'முக்கிய' புள்ளிவிவரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 4 மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 15ஆம் தேதி 990 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மே 13ஆம் தேதி 3,525 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனா நோயாளிகளில் 2.75 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும், 0.37 சதவீதம் பேர் வென்டிலேட்டர்களிலும், 1.89 சதவீதம் பேர் ஆக்சிஜன் ஆதரவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, 352 அரசு ஆய்வகங்கள் மற்றும் 140 அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் ஒரே நாளில் கொரோனாவுக்கான 94,708 மாதிரிகளை பரிசோதித்துள்ளதாகவும், ஜனவரி 24 ஆம் தேதி முதல் இதுவரை 18,56,477 பரிசோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரை 78 லட்சம் எண்95 முகமூடிகள் மற்றும் 42 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் வழங்கபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் சுமார் 900 பிரத்யேக கொரோனா மருத்துவமனைகள், 1,79,882 படுக்கைகள் (தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள்- 1,60,610 மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள்- 19,272) உள்ளதாகவும், 2,040 கொரோனா சுகாதார நிலையங்கள், 1,29,689 படுக்கைகள் (தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள்- 1,19,340 மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள்- 10,349) உள்ளதாகவும் 8,708 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுடன், 5,577 கொரோனா பராமரிப்பு மையங்கள், 4,93,101 படுக்கைகள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், "இந்தியா இதுவரை கொரோனா பாதிப்பை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
