'அப்பா...! நம்ம ஊர்லயும் கொரோனா வந்துச்சுப்பா...' 'அழாத ரோஜா, நான் வெளிய போகமாட்டேன்...' கண்ணீர் வரவழைக்கும் அப்பா, மகள் கான்வர்சேஷன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவரும், தனது 4 வயது சிறுமியும் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது கண்களிலும் கண்ணீரை வர வைக்கிறது.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த அசாதாரண சூழலில் நம் அனைவருக்காகவும் தன்னலமில்லாமல் உழைத்து வருவது மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் தான் கர்நாடக மாநில அரசு அதிகாரி ஒருவர் கொரோனா ஊரடங்கு பிறப்பித்த நாள் முதல் இன்று வரை தனது வீட்டிற்கு செல்லாமல் பணியிடத்திலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.
கிராம கணக்காளராக பணியாற்றி வரும் பிக்கப்பா ரெட்டி என்பவர் கர்நாடக மாநிலம் பல்லாரி அருகே குடிதினி கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் இவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களை பிரிந்து அலுவலகத்திலேயே இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் அளித்து வருகிறார்.
சுமார் 45 நாட்களுக்கு மேலாக குடும்பத்தினரை பிரிந்து வசித்து வரும் இவர் தினமும் தன் மகள்களுடன் வீடியோ காலில் பேசி வருகிறார். இந்நிலையில் பல்லாரி சண்டூர் தாலுகாவின் கிருஷ்ணா நகரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனை அறிந்த அவரின் 4 வயது மகள் ரோஜா உடனே தந்தையை பார்க்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். எவ்வளவு சமாதானம் சொன்னாலும் கேட்காததால் பிக்கப்பாவிற்கு போன் செய்து கொடுத்துள்ளார் அவரது அம்மா. இவர்கள் பேசிய ஆடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரது நெஞ்சையும் உருக்கும் வகையில் உள்ளது.
அந்த ஆடியோவில் மகள் ரோஜா தன் தந்தையிடம் 'அப்பா...! பல்லாரிக்கும் கொரோனா வந்துடுச்சு, நீங்க வெளிய எங்கயும் போகாதீங்க. ஆபீஸ்லயே இருங்க' என தனது மழலை குரலில் பேசி தழுதழுத்து அழுகிறாள்.
மகளை சமாதானம் படுத்தும் முயற்சியில் தந்தை தோற்று தான் போக முடிந்தது.
'அழாத ரோஜா' என தழுதழுத்த குரலில் சமாதானப்படுத்திய பின் மீண்டும் அந்த குழந்தை, 'அப்பா நீங்க பத்திரமா இருக்கணும்,பல்லாரியில் கொரோனா வந்துருச்சு, வெளிய போகாதீங்க' என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்த தன் மகளிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார் பிக்கப்பா ரெட்டி. கடைசியாக 'நான் வெளிய போகமாட்டேன் மா. நீயும், அம்மா, அக்காளும் பத்திரமாக இருங்கள்' எனக் கூறி தனது போன்கால் இணைப்பை துண்டித்தார்.
44 நாட்களுக்கு மேலாக தன் தந்தையை பார்க்க முடியாத மகளின் பாசப்போராட்ட ஆடியோவை கேட்பவரின் அனைவரின் கண்களும் கண்ணீரில் மிதப்பதை தான் நாம் உணர முடிகிறது.