‘அத இப்போ பண்ணாதீங்க’.. டிரம்ப்-க்கு நேரடியாக ‘எச்சரிக்கை’ விடுத்த முக்கிய நபர்.. பரபரப்பை கிளப்பும் ஊரடங்கு விவகாரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 14, 2020 07:00 PM

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பது தொடர்பாக அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டு மருத்துவ ஆலோசகர் ஃபாஸிக்கும் இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது.

Trump clashes with top scientist over plan to reopen US schools

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 4.4 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒருபுறம் கொரோனா வைரஸ் புரட்டி எடுக்க, மறுபுறம் ஊரடங்கால் பல லட்சம் மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். ஆனால் டிரம்பின் இந்த முடிவுக்கு அந்நாட்டு பல மாகாண ஆளுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நியூயார்க் ஆளுநர், ‘அதிபரின் உத்தரவை விட மக்களின் உயிர்தான் முக்கியம். இதனால் வைரஸ் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கில் தளர்வு இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தி பள்ளிகளை திறக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிபரின் இந்த கருத்துக்கு அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபாஸி நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சட்டம் இயற்றும் செனட் சபை உறுப்பினர்களிடம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் சாட்சியம் ஃபாஸி அளித்துள்ளார். அதில், ‘ஊரடங்கு உத்தரவை மிக விரைவாக இப்போதே தளர்த்தினால் வரும் காலத்தில் அமெரிக்கா நிறைய உயிரிழப்புகளை எதிர்கொள்ளும் நிலை வரலாம். பள்ளிக்கூடங்களை திறக்க அதிபர் முடிவெடுத்துள்ளார். ஆனால் அனைத்துக் குழந்தைகளும் வைரஸுடன் போராடும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் எனக் கூறமுடியாது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும்போது படிப்படியாகத்தான் ஊரடங்கில் தளர்வு விதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது பதிலளித்த டிரம்ப், ‘டாக்டர் ஃபாஸி நாட்டின் அனைத்து சமன்பாட்டிலும் விளையாட விரும்புகிறார். அவருடைய பதிலைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அது ஏற்றுக்கொள்ளகூடிய பதில் இல்லை என எனக்கு மட்டுமே தெரியும். குறிப்பாக பள்ளிகள் திறக்கும் விஷயத்தில். வயதான ஆசிரியர்கள், பேராசியர்கள் பள்ளிக்கு வருவதை சில வாரங்கள் ஒத்திவைக்கலாம் எனக் கூறியுள்ளது மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் அதிக வயதுடையவர்களுக்குத்தான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் குழந்தைகள், மாணவர்களின் பாதிப்பு பற்றிய நம் நாட்டின் புள்ளிவிவரங்கள் உண்மையில் ஆச்சரியமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.