'காளையை போட்டு அமுக்கி 'டிக் டாக்' செஞ்ச இளைஞர்'...'கோவையில் நடந்த சோகம்'...அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 23, 2019 12:59 PM

டிக் டாக் மோகத்தால் காளை மாட்டுடன் வீடியோ எடுத்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Youngster Dies After Attempting to do Tik Tok with Bull

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். காளை மாடுகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், வீட்டில் காளை மாடுகளை வளர்த்து வந்தார். அவற்றை வைத்து ரேக்ளா ரேஸ்க்கு தயார்படுத்தி வந்த அவர், அந்த காளை மாடுகளுடன் டிக் டாக் செய்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோருடன் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர். அங்கு காளையை குளிப்பாட்டி கொண்டிருந்தபோது, மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் டிக் டாக் வீடியோ  எடுத்து கொண்டிருந்தார்கள். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்தனர். இதுபோன்று வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய விக்னேஸ்வரனும், அவரது நண்பர்களும், மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் விக்னேஸ்வரனும், அவரது நண்பர்களும் மீண்டும் காளையை கூட்டிக்கொண்டு அந்த குட்டைக்கு சென்றார்கள். இதையடுத்து காளையை குட்டையின் உள்ளே கூட்டி சென்ற அவர்கள், அதன் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். முதலில் அமைதியாக இருந்த காளை திடீரென மிரண்டு போக, விக்னேஸ்வரனை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத விக்னேஸ்வரன், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை, அவரது நண்பர்களும் காப்பாற்ற முடியாமல் போனது.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விக்னேஸ்வரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான முறையில் டிக்டாக் செய்வதால் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #COIMBATORE #TIK TOK #BULL #YOUNGSTER #DIES