'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் ஜாலியாக விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எல்லாம் வாட்ஸ்-அப் மூலம் ஆசிரியர்கள் வேட்டு வைத்து விட்டார்கள்.
![Coronavirus : School teachers sending notes through whatsapp Coronavirus : School teachers sending notes through whatsapp](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/coronavirus-school-teachers-sending-notes-through-whatsapp.jpg)
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளி-கல்லூரிகள் நேற்று முதல் மூடப்பட்டன. 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் விடுமுறை என்பதால் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் பொங்கியது. அதே நேரத்தில் தொடர் விடுமுறையின் காரணமாகக் குழந்தைகளை எப்படி வீடுகளில் சமாளிப்பது என, பெற்றோர்கள் புலம்பிய வண்ணம் இருந்தனர்.
இதை உணர்த்தும் வகையில் தொடர் விடுமுறை காரணமாக வீடுகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகக் கூறி ஒரு வீட்டில் 2 குழந்தைகள் சண்டையிடுவது போன்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. ஆனால் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உள்ளது. அந்த வாட்ஸ்-குரூப் மூலம் பள்ளி வகுப்பறையில் நடத்தப்படுவது போலவே மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதைக் கண்காணிக்கவும் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதனைச் சற்றும் எதிர்பாராத மாணவர்கள் சோகத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இதனிடையே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் ''உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாடங்களை முறையாக செய்ய உதவுங்கள். இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும் போது 90ஸ் கிட்ஸ் எல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க என நினைப்பவர்கள் கீழே கமெண்ட் பண்ணுங்க.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)