'கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, ஆனால்...' 'இன்னைக்கு ஒருத்தர வச்சு டெஸ்ட் பண்ண போறோம்...' அமெரிக்கா சுகாதாரத்துறை தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக மக்கள் அனைவரையும் மரண பயத்தை காட்டிய கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள செய்தி அனைவரையும் கவனிக்க வைத்து உள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களாக கட்டுக்குள் வராமல் அனைத்து உலக நாடுகளையும் பீதி அடைய செய்துள்ளது. இதுவரை 162 நாடுகளுக்கு பரவிய இந்த வைரசால் சுமார் 7173 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பு எண்ணிக்கையில் சீனாவே அதிகமாக காணப்படுகிறது. சீனாவில் 3226 பேரும், அதை அடுத்து இத்தாலியில் 2158 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 7 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு mRNA -1273 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து மொடெர்னா என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
mRNA -1273 என்ற இந்த தடுப்பு மருந்தை முதலில் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 45 நபர்களுக்கு முதற்கட்ட பரிசோதனையாக செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மொத்தம் 6 வாரங்களுக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பரிசோதனை இன்று ஒருவருக்கு இன்று செலுத்தப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
mRNA-1273 -ஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் கையில்தான் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றாலும் மருந்தானது வெளிவர ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என இது குறித்து பேசியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
