‘பிரசவம்’ முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு ‘கொரோனா’.. ‘நள்ளிரவு’ மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 21, 2020 01:23 PM

கோவையில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coimbatore pregnant woman affected by coronavirus

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் சவரங்காடு எஸ்டேட் பகுதியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிப்பெண் ஒருவர் கடந்த 10 தேதி பிரசவத்திற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக அனுப்பப்பட்டார்.

அங்கு ஏப்ரல் 11ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து ஏப்ரல் 18ம் தேதி அன்று மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யட்டு ஆம்புலன்ஸ் மூலம் அட்டக்கட்டி சோதனை சாவடி வரை வந்துள்ளார். பின்னர் ஆம்னி வேன் மூலம் சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் அவரை குடியிருப்பில் இருக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பிறந்த குழந்தையுடன் செய்வதறியாது தவித்த அப்பெண் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது சேகரிக்கப்பட்ட அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அன்று நள்ளிரவு அப்பெண், அவரின் குழந்தை மற்றும் சித்தி ஆகிய மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை மையமான இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அப்பெண் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் பயணக்குறிப்புகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.