VIDEO: ‘தம்பி படியில நிக்காத மேல வா’.. சத்தம்போட்ட கண்டெக்டர்.. கோபத்தில் கல்லூரி மாணவர் செய்த காரியம்.. கோவை அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேருந்து படிகட்டில் பயணம் செய்ததை கண்டெக்டர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் கல்லால் பேருந்து கண்ணாடியை உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது மாணவர் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை பேருந்துக்குள் ஏறிவருமாறு கண்டெக்டர் கூறியுள்ளார்.
இதனால் மாணவருக்கும், கண்டெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவர், பேருந்து ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கல்லால் பேருந்தின் பின்புறம் எறிந்துவிட்டு ஓடியுள்ளார். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
உடனே பேருந்தை நிறுத்தி டிரைவரும், கண்டெக்டரும் மாணவரை துரத்துக்கொண்டு ஓடியுள்ளனர். ஆனால் அதற்குள் மாணவர் தப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பேருந்து நடத்துநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தனியார் பேருந்து மீது கல் வீசிய மாணவரின் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
