VIDEO: அவரோட விக்கெட்டை 'இப்டித்தான்' கொண்டாடணுமா? ... அரைகுறையான கேள்வி... செய்தியாளரிடம் கடும் 'வாக்குவாதம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 02, 2020 01:30 PM

கேள்வி கேட்ட செய்தியாளரிடம் இந்திய கேப்டன் விராட் கோலி, வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

IND Vs NZ: Virat Kohli lost his Cool in a Press Meet

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், எந்தவித சவாலும் இன்றி இந்திய அணி எளிதாக டெஸ்ட் தொடரை இழந்தது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என புகழப்படும் இந்திய அணி இப்படி எளிதாக நியூசிலாந்து அணியிடம் சரண்டர் ஆனதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்திய அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோல்விக்குப்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்த விவகாரம் பெருத்த விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலி களத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோலி சற்று கட்டமாகவே பதிலளித்தார். அந்த உரையாடலை கீழே பார்க்கலாம்.

செய்தியாளர்:  விராட், களத்தில் நீங்கள் வில்லியம்சன் ஆட்டமிழந்தபோது நடந்துகொண்ட முறை சரிதானா..? இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் களத்தில் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டாமா?

விராட் கோலி: நீங்க என்ன நினைக்கிறீங்க?

செய்தியாளர்: நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

விராட் கோலி: நான் உங்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.

செய்தியாளர்: நீங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.

விராட் கோலி: களத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு நீங்கள் இன்னும் சிறப்பான கேள்விகளுடன் வர வேண்டும் என நினைக்கிறேன். இங்கு நீங்கள் அரைகுறையான கேள்விகளுடனோ அரைகுறையான தகவல்களுடனோ வரக் கூடாது. அதேபோன்று உங்களுக்கு ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு இது இடம் கிடையாது. நான் போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன், நடந்தவற்றில் அவருக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை. நன்றி!

இவ்வாறு செய்தியாளரின் கேள்விக்கு விராட் ஆவேசமாக பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான தோல்விக்குப்பின்னர் கோலி, செய்தியாளரிடம் ஆவேசமாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.