‘அவர் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்’!.. சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் பிரபலமான சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் நேற்று நள்ளிரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
சிவராஜ் சிவக்குமார் பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் நேரிடையாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவர். இதுமட்டுமன்றி இவரது குடும்பமே சித்த வைத்தியத்தில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான சேலம் சித்த வைத்தியர் திரு.சிவராஜ் சிவக்குமார் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
திரு.சிவராஜ் சிவக்குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். pic.twitter.com/AjSVRueaNt
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 10, 2021
“நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் சொல்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப சிவராஜ் சிவக்குமார் சித்த வைத்தியத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அவரின் மறைவு சித்த மருத்துவ துறைக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என முதல்வர் பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
